Saturday, December 16, 2006

இணையம் இணைக்கிறது இதயங்களை!



இணையத்தால்
இணைந்தனவோ
நம் இதயங்கள்
இரண்டும்!

கணினித் திரையினில்
உன் கண்களைத்தான்
பார்க்கிறேன் நான்!

மின்னஞ்சல் வரிகள்
எல்லாம் நம்
நெஞ்சங்களின் வண்ணங்களே!

காலையில் எழுவதற்கு
அலாரம் எதற்கு?
உறங்கினால்தானே நான்!

நீதான் மெசஞ்சரில்
பிங்க் செய்கிறாயே!
நீ வந்தபின்புதானே
எனக்கு பொழுது புலர்ந்தெதென்பது
புலனாகிறது!



நிஜமான உலகில்
நீண்ட இடைவெளிதான்
நமக்குள்!

சைபர் ஸ்பேசில்மட்டும்
சந்தித்துக் கொள்கிறோம்!
நித்தமும்
சப்தமிடாத
முத்தங்களுடன்!

Sunday, August 06, 2006

உறவு!

எல்லோரும் இருந்தும்
ஏதோ நான்
தனியே இருக்கிறேன்.

என் உள்ளத்தில்
இப்போது
வெற்றிடம்
நிரம்பி வழிகிறது!

என் தேடல்
ஒரு தவமாயிருக்கிறது!
வரம் என்று
கிடைக்கும்?

பொல்லா வினையா?
பாவத்தின் பலனா?
விதியின் சதியா?
என்னவென்று
தெரியவில்லை!

எனக்கே
எனக்கென்று
எப்போது
வருவாய் நீ?
என் தோளில்
சாய்ந்து கொள்ள..!

காதலா? ..நட்பா..?


காதலா? நட்பா? என்று
ஒவ்வொரு முறையும்
கலந்தாய்வு நடக்கிறது
நம்முள்!

காதல் என்கிறேன்
நான்!
நட்பு என்கிறாய்
நீ!

பெயர்தான் வேறு!
உணர்வுகள் ஒன்றுதான்!
புரிந்துகொள்கிறோம்
இறுதியில்!

Saturday, July 22, 2006

காத்திருக்கிறேன்....!


விழிகள் வாசலில்
உன்னை எதிர்பார்த்து!
விழிகளின் வாசலில்
கண்ணீர் தயாராகும்!

காரணமே இல்லாது
கலங்குகிறது உள்ளம்!
இதயம் படபடக்க
உன் வருகையைப்
பார்த்திருப்பேன்!

காத்திருக்கிறேன்
ஒவ்வொரு முறையும்!
கடந்து செல்கிறாய்
ஒவ்வொரு முறையும்!

கவனித்து சென்றாயா?
தெரிவதில்லை எனக்கு!

குறிஞ்சி மலராய்
எப்போதேனும் நீ
உதிர்க்கும்
புன்னகையும்
எனக்கென்றே
நினைத்து
காத்திருத்தலைத்
தொடர்கிறேன்....!

Tuesday, June 13, 2006

ஏனிந்தப் பிரிவு?


எனக்கும் உனக்கும்
ஏன்
இத்தனை நாள்
ஓர் பிரிவு?


தொலைவில் இருந்தாலும்
நினைவில்
தொடர்ந்தே இருந்தோமே!

எனக்கும் உனக்கும்
ஏன்
இத்தனை நாள்
ஓர் பிரிவு?

பணிகள் சுமையெனினும்
விழிகளில் நினைத்தோமே!

எனக்கும் உனக்கும்
ஏன்
இத்தனை நாள்
ஓர் பிரிவு?

என்ன ஒரு
பணிச்சுமையோ!
ஒரு மடல் கூடச்
செய்யாமல்
இத்தனை நாள்
என்ன செய்தேன்?

எனக்கும் உனக்கும்
ஏன்
இத்தனை நாள்
ஓர் பிரிவு?

Monday, February 13, 2006

உன்னைப் பிடிக்கும் எப்போதும்

உன்னை
வம்புக்கிழுத்தே
வாய் திறக்க
வைக்கிறேன்!

நீ சண்டையிடும்போதும்
எனக்கு உன்னை
பிடித்திருக்கிறது!
மௌனமாய் இருக்கும்
தருணங்கள் போலவே!

Sunday, February 12, 2006

மௌனம் ஏன்?

சந்தித்தும் பேசாத
மௌனம் ஏன் தோழி?

மௌனம் ஓர்
முள் படுக்கை
என்று தெரியுமா
உனக்கு?

என்ன தவறு
செய்தேனென்று
இத்தகைய தண்டனை?

மௌனத்தைக்
கலைத்து
ஓர்
வார்த்தை சொல்
போதும் எனக்கு!
"இறந்து விடு" என்று!

Tuesday, January 31, 2006

கணையாழி

தாயின் மடி தந்து,
எனைத் தாலாட்டித்
தூங்க வைக்க என்
தலை கோதும் உன்
விரல்களுக்கு
நான் அணிவிக்கும்
கணையாழி
இந்த கவிதை...!

Sunday, January 29, 2006

கலாய்க்க நினைத்தவன்..!

உன்னை கலாய்க்க
முயற்சித்தே
கலைந்து போனவன்
நான்..!

சீண்டிப் பார்க்க
நினைத்து
சிதறிப் போனவன்
நான்..!

அழ வைத்துப்
பார்க்கும் முயற்சியில்
அழ ஆரம்பித்தவன்
நான்..!

பரிகசித்துப்
பார்க்க
நினைத்து
பரிதவித்துப் போனவன்
நான்..!

கவிதைகளால்
உன்னை திணறடிக்கும்
முயற்சியில்
தீர்ந்து போனவன்
நான்..!

Tuesday, January 24, 2006

நேர மாற்றம்..!

நேர மாற்றம்
அறிவுக்குத்
தெரிகிறது..!

அன்பிற்குப்
புரிவதில்லை.
நீ
வரும்
வரையில்
ஆலாய்ப்பறக்கும்
நான்
நீ
வந்த
பின்போ
அமைதியாகி
விடுகிறேன்..!

தாயின் மடி கண்டேன்...!

தாயின் மடி சாய்ந்து
தாலாட்டைக் கேட்டபடி
கண்மூடிக் கிடக்கும்
சுகத்தை நான்
உணர்கிறேன்
உன்னோடு
உள்ளபோது

Monday, January 23, 2006

வேறென்ன செய்ய உத்தேசம்.....?

கடிதங்கள் மூலம்
என்னை
திணற வைத்தாய்..!

கடிதங்கள் இல்லமல்
என்னை
கலங்க வைத்தாய்...!

என்
கடிதங்களுக்காய்
கண்ணீர் விட்டாய்...!

வேறெங்கும்
காணக் கிடைக்காத
என் தோழியே..!

என்னை
வேறென்ன செய்வதாய்
உத்தேசம்..?

Saturday, January 21, 2006

உறவுகளின் கல்வித்திட்டம்


பிரிவின்
வலியுணர்ந்து
மீண்டும்
சந்தித்தோம்.

கண்களில்
கண்ணீரோடு
மனசு
நிறைய
சந்தோஷம்..!

மௌனத்தின்
மொழியில்
பேசிக்கொள்கிறோம்.

இது
உறவுகளின்
கல்வித்திட்டம்..!

பிரிவின்றி
உறவில்
இனிதில்லை
என்றுணர்த்தும்!

உன்னை
நானும்
என்னை
நீயும்
உணர்ந்துகொள்ள
வைக்கும்
செயல்முறைப்
பாடம்...!

Friday, January 20, 2006

ஒத்தி வைப்புத் தீர்மானம்!


கண்ணிமைக்கும்போது கூட
ஓர் கணப்பொழுது
உன்னைப் பிரிய நேருமே
என்று

இமைத்தலுக்கும்
இயற்றுகிறேன் ஓர்
ஒத்தி வைப்புத் தீர்மானம்!
நீ
என்னுடன் இருக்கும்போது..!

Thursday, January 19, 2006

உன் கடிதங்கள்...!


இன்று
உன் கடிதம்
வாராது என்று
தெரிந்தும் கூட..

அஞ்சல் பெட்டியை

அடிக்கடி
திறந்து பார்த்துக்

கொண்டிருக்கிறேன்..!

எதையேனும்
பார்க்காமல்
விட்டிருப்பேனோ
என்று.....!

சினேகம்


வாழ்வில்
தோன்றும்
நிரந்தர
வானவில்!

ஒளிக்கற்றையாய்
நீ...!
நீர்த்திவலைகளாய்
நான்...!

சிறு பிரிவே என்றாலும்...!




பிரிவுகள் ஓர்
சிறுபொழுதே ஆனாலும்
சினேகத்திற்குரியவர் என்றால்
நரகம்தான் நம்
அருகில் கிடைக்கும்!

கண்ணீர்
எட்டிப் பார்க்கும்!
கை விரலோ
துடைக்க மறுக்கும்!
இதயம் துடிக்க
மறக்கும்!

இது நேசத்திற்கான
நெஞ்சம்!
நீ இல்லாத பொழுதுகளோ
நேசத்திற்கு பஞ்சம்!

தோள் சாய்ந்து
அழுகை,
மடி சாய்ந்து
உறக்கம்,
இதமான வார்த்தைகள்,
இவற்றுக்கு நான்
எங்கே போவது? - நீ
இல்லாத தருணங்களில்!