Tuesday, October 19, 2010

என்னையே கேட்கிறாய்..!


எனக்கான தோழி யரென்று

என்னையே கேட்கிறாய்?
தெரிந்து கேட்கிறாயா
தெரியாமல் கேட்கிறாயா
என்று தெரியாமல்
விழிக்கிறேன் நான்!

எவரும் இல்லை
என்று சொன்னாலும்
பொய் சொல்கிறேன்
என்கிறாய்!
எனக்குத் தெரியவில்லை!
நீயே சொல் என்கிறேன்!
காத்திருக்கச் சொல்கிறாய்!

உன் மீதான என் நேசத்தை
அறிந்தவளாய்த்தான் இருக்கிறாயா?
நான் சொல்லாத
என் தோழி
நீதானென்று
உன்னிடமே
எப்படிச் சொல்வது?

Friday, February 12, 2010

உனக்கான என் கவிதை...!



இதோ!
உனக்கான
என் கவிதை!
உனக்கு மட்டுமே
புரியக் கூடும்!
என் இதயத்தின்
வரிகளை
ஒன்று விடாமல்
படித்தவள்
நீ மட்டுமே!

வரிகளை வாசிக்கும்போது
சில வலிகளையும் உணர்ந்து
வருடியவளும் நீயேதான்!

மூங்கில் காடுகளின்
மத்தியில்
என் கனவுகளில்
என் கைகோர்த்து நடக்கையில்கூட
நினைத்துப் பார்த்திருக்கிறேன்!
எப்பொழுதேனும் நிரந்தரமாய்
என்னுடன் வந்தாலென்னவென்று
நீ யோசித்திருக்கிறாயோ என்று!

கடற்கரைச் சாலை
கல்லூரி வாசல்
ஐஸ்கிரீம் பார்லர்
என்று
நீ உடனிருந்த
அனைத்து இடங்களுமே
என்னை மறந்திருந்த
சொர்க்க பூமிகளாகவே
இருந்திருக்கின்றன!

விடிந்தும் விடியாத
அதிகாலைப் பொழுதுகளில்
உன் மெல்லிய விரல்களின்
ஸ்பரிஸத்துடன்
கதகதப்பான உன்
இதழ்கள் சொல்லும்
காலை வணக்கத்தை
வேண்டியே
பொய்யுறக்கம் கொண்டு
கண் மூடிக் கிடக்கிறேன் நான்!

தேவதைகளுக்கும்
மனிதர்களுக்கும்
ஏனோ
ஏழாம்பொருத்தமாகவே
இருந்து வருகிறது!
எப்பொழுதும் சேர்ந்தே
இருக்க முடிவதில்லை!

விதிகளை
உடைப்போம்!
மரபுகளை
மறுப்போம்!
இனியேனும்
சேர்ந்திருக்கக் கூடுமா
என்று ஆராய்வோம் வா
என் அழகு தேவதையே!
அங்கே
காதலர் தினம்
நமக்காகக்
காத்திருக்கிறது!