Tuesday, October 19, 2010

என்னையே கேட்கிறாய்..!


எனக்கான தோழி யரென்று

என்னையே கேட்கிறாய்?
தெரிந்து கேட்கிறாயா
தெரியாமல் கேட்கிறாயா
என்று தெரியாமல்
விழிக்கிறேன் நான்!

எவரும் இல்லை
என்று சொன்னாலும்
பொய் சொல்கிறேன்
என்கிறாய்!
எனக்குத் தெரியவில்லை!
நீயே சொல் என்கிறேன்!
காத்திருக்கச் சொல்கிறாய்!

உன் மீதான என் நேசத்தை
அறிந்தவளாய்த்தான் இருக்கிறாயா?
நான் சொல்லாத
என் தோழி
நீதானென்று
உன்னிடமே
எப்படிச் சொல்வது?

Friday, February 12, 2010

உனக்கான என் கவிதை...!



இதோ!
உனக்கான
என் கவிதை!
உனக்கு மட்டுமே
புரியக் கூடும்!
என் இதயத்தின்
வரிகளை
ஒன்று விடாமல்
படித்தவள்
நீ மட்டுமே!

வரிகளை வாசிக்கும்போது
சில வலிகளையும் உணர்ந்து
வருடியவளும் நீயேதான்!

மூங்கில் காடுகளின்
மத்தியில்
என் கனவுகளில்
என் கைகோர்த்து நடக்கையில்கூட
நினைத்துப் பார்த்திருக்கிறேன்!
எப்பொழுதேனும் நிரந்தரமாய்
என்னுடன் வந்தாலென்னவென்று
நீ யோசித்திருக்கிறாயோ என்று!

கடற்கரைச் சாலை
கல்லூரி வாசல்
ஐஸ்கிரீம் பார்லர்
என்று
நீ உடனிருந்த
அனைத்து இடங்களுமே
என்னை மறந்திருந்த
சொர்க்க பூமிகளாகவே
இருந்திருக்கின்றன!

விடிந்தும் விடியாத
அதிகாலைப் பொழுதுகளில்
உன் மெல்லிய விரல்களின்
ஸ்பரிஸத்துடன்
கதகதப்பான உன்
இதழ்கள் சொல்லும்
காலை வணக்கத்தை
வேண்டியே
பொய்யுறக்கம் கொண்டு
கண் மூடிக் கிடக்கிறேன் நான்!

தேவதைகளுக்கும்
மனிதர்களுக்கும்
ஏனோ
ஏழாம்பொருத்தமாகவே
இருந்து வருகிறது!
எப்பொழுதும் சேர்ந்தே
இருக்க முடிவதில்லை!

விதிகளை
உடைப்போம்!
மரபுகளை
மறுப்போம்!
இனியேனும்
சேர்ந்திருக்கக் கூடுமா
என்று ஆராய்வோம் வா
என் அழகு தேவதையே!
அங்கே
காதலர் தினம்
நமக்காகக்
காத்திருக்கிறது!

Tuesday, July 14, 2009

என் உயிரின் உறவுக்கு #2

கண்ணென்ற ஒன்று
இல்லாமல் போனாலும்
நெஞ்சோடு உன் உருவம்
நான் சேர்த்து வைப்பேன்!

மனதென்ற ஒன்று
இல்லாமல் போனாலும்
மறக்காது உன் நினைவை
நான் சேர்த்து வைப்பேன்!

உயிரென்ற ஒன்று
இல்லாமல் போனாலும்
என் ஆவி என்றென்றும்
உன் பெயரே பாடும்!

இரவோடு என் நெஞ்சம்
உறங்காது அன்பே!
உன் உறவோடுதானே
கண் மூடும்!

என் செவியோடு உன்னை
இசையாக்கி வைத்தேன்!
என் கண்ணோடு உன்னை
இமையாக்கி வைத்தேன்!
என் உள்ளத்தில் உன்னை
உணர்வாக்கி வைத்தேன்!
என் உயிரோடு உன்னை
உறவாக்கி வைத்தேன்!

உன் நேசம் - நான்
கொண்ட வரமிது!
ஏழேழு ஜென்மத்தின்
தவமிது!

விழியோரம் துளிர்க்கும்
என் கண்ணீரைத் துடைக்க
என் மனமோ உன்
விரலைத் தேடும்! - அது
வாராமல் போனாலோ - என்
நெஞ்சம் வாடும்!

நான் சோர்வானபோது
இளைப்பாறிக் கொள்ள
என் மனமோ உன்
மடி சேரத் துடிக்கும்! -அது
கிடைக்காமல் போனாலோ- என்
இதயம் வெடிக்கும்!

என் வாழ்நாளில் எப்போதும்
அசை போடும் நேரங்கள்!
உன் அருகமர்ந்த நாட்கள்!
உன் தோள் சாய்ந்த தருணங்கள்!

என் கண்ணோடு இமையாய்
காதோடு இசையாய்
உள்ளத்து உணர்வாய்
மொத்தத்தில்
என் உயிரின் உறவாய் நீ1

இது நட்புக்கு நான்
சொல்லும் நன்றி! - இனி
ஓர் நாளும் இல்லை
நீ இன்றி!

Monday, September 29, 2008

சிநேகிதியே..!


உன் ரசனைகளின்

விவரிப்பில் என்னை

உன் ரசிகனாக்குகிறாய்!


விழிகள் விரித்து

ஒவ்வொன்றாய்

நீ வியந்து கூறும்

விஷயங்கள் ஒவ்வொன்றும்

முன்னெப்போதும் இல்லாமல்

அழகாய்த் தோன்றுகின்றன

எனக்கு!


வண்ணத்துப் பூச்சியொன்றை

பிடித்து உன்

கைகளில் கொடுத்தேன்!

வின் விரல்களில்

கண்டபிறகுதான்

வண்ணத்துப் பூச்சியின்

அழகு

எனக்குப் புரிகிறது!


உன் முகம்

சிவக்கும்போதெல்லாம்

ரோஜாக்கள்

தலை தாழ்த்திக்

கொள்கின்றன!

உன் வெட்கம்

பார்த்து

அவைகளுக்கும்

வெட்கமாம்!


ரோஜா இதழ்களை

வருடிப் பார்க்கிறாய்

உன் இதழ்களால்!

எது மென்மையென்று

கண்டுகொள்ள

எனக்கும் ஆசைதானடி!


நீ

பொய்க்கோபம் கொண்டாடும்

தருணங்களைக்

காண வேண்டியே

இப்படியெல்லாம்

பொய்யாய் வர்ணிக்கிறேன்

ஒவ்வோர் முறையும்!

ஆமாம்!

உன் பொய்க்கோபம்

எனக்குக்

கொள்ளை அழகுதானடி!


Monday, August 04, 2008

நட்பு


ஆளுக்கொரு திசையில்
ஆளுக்கொரு பணியில்
எவ்வளவோ தொலைவு
இணையத்தால் கூட
இணைக்கமுடிவதில்லை சில நேரம்!

இருந்தாலும்
இணைந்தே இருக்கிறோம்!
நினைவுகளால்
ஒருவரோடுவர்!

நினைக்கக் கூட
நேரமில்லையோ
என எண்ணுகிறேன்!
அப்பொழுதெல்லாம்
"அட மண்டு!
மறந்தால்தானே
நினைக்க வேண்டும்
என்கிறாய்!"

எவரும் அறியாவண்ணம்
எனக்குள்ளே
சிரித்துக் கொள்கிறேன்!
என்னைத்தான்
பைத்தியமாக்கி
வைத்திருக்கிறாயே!

உன் பேர்
சொல்ல ஆசைதானென்று
உரக்கப் பாடும்
நான்
உன் பேரை மட்டும்
மௌனமாய்
உச்சரித்து மகிழ்கிறேன்!
நான் உச்சரிக்கும்
கவிதை
உனக்கு மட்டும்
கேட்கம் என்று!


நீ
நான்
நாம்
தவிர
வெறொருவரில்லா
உலகைத்
தேடிக் கொண்டிருக்கிறேன்!
நண்பர்கள் தினப் பரிசாய்
நான் உனக்குத் தர!

நாமும்தான்
கொண்டாடுவோமே
நண்பர்கள் தினத்தை!
அவரவர் இடத்தில்
இருந்தபடியே!


இன்று
முதல் முதலாய்
உன் விரல் பிடித்து
முத்தமிடுகிறேன்
கேட்கிறதா உனக்கு
என்
முத்தத்தின் சத்தம்?

Thursday, June 07, 2007

மீண்டும் மழலையாகிறேன்!




மீண்டும்
மழலையாகிறேன்!
அப்பொழுதேனும்
அள்ளியெடுத்துக்
கொஞ்ச
நீ
வருவாய் என்று!

மீண்டும்
மழையில் நனைகிறேன்!
காய்ச்சல் இருக்கிறதா
என்று நாளை
நீ
நெற்றி தொட்டுப்
பார்ப்பாய் அல்லவா?

மீண்டும்
தரையைப் பார்க்கிறேன்!
எனக்குள் ஏதோ
சலனமென்று
நீ
என் முகவாய் தொட்டு
தூக்கிப் பார்ப்பாய்!

மீண்டும்
உன்னைப் பிரிந்து செல்கிறேன்!
என் தவிப்பை உணர்ந்து
நீ
என்னைத் தேடி வருவாய்!

Tuesday, February 13, 2007

பரிசு!


காதலர் தினப்பரிசாய்
இக் கவிதையைத்
தருகிறேன் என்றேன்!
ஏற்றுக் கொண்டாய்
என் தோழியாய்!

தோள் கொடுத்தால்
சாய்ந்து கொள்கிறாய்!
கை கொடுத்தால்
பிடித்துக் கொள்கிறாய்!

எல்லா நேரங்களிலும்
சமர்த்தாகவே இருக்கிறாய்!

அடம் பிடிப்பது
எப்போதுமே
நானாக இருக்கவேண்டுமென
விரும்புகிறாய்!
அப்போதெல்லாம்
அன்பாக
சமாதானப் படுத்துகிறாய்!

நீ திட்டினாலும்
செல்லமாய்க்
குட்டுவதாகவே
எனக்குத் தோன்றுகிறது!

காதலா? நட்பா?
என்ற கலந்தாய்வு
நடந்து கொண்டிருக்கிறது
என்னுள் - முடிவின்றி !
அதையும் நீ
அமைதியாக
ரசித்துக் கொள்கிறாய்!

உன் முந்தானைச்
சிறகோடு முகம் வைத்துத்
தூங்க விரும்புகிறேன்!
அதற்கும் அனுமதிக்கிறாய்!

என் விருப்பம்
மட்டுமே
உன் விருப்பம்
என்று
நான் சொல்லும்
அனைத்திற்கும்
செவி சாய்க்கிறாய்!

அன்பென்ற ஒன்றின்
ஆத்மார்த்தமான தேடலில்
முப்பதாண்டு முடிவில்
நீயெனக்கு கிடைத்திருக்கிறாய்!

இன்றுதான் காதலர் தினமாமே!
என்ன பரிசு தருவது உனக்கு?
என்னைத் தவிர?


கட்டாய மாற்றம்


காதலில் விழாதிருந்த
என்னை
கட்டாயமாய் மாற்றிவிட்டாய்!
உன் ஒற்றைப்
பார்வையில்!
பீட்டா
பிளாக்கரைப் போல்!
ஆயினும் கண்டிக்கத்
தோன்றவில்லை!
காதலும்
சுகமாய்த்தானடி
இருக்கிறது!
உன்
பார்வையைப் போல்!