Thursday, June 07, 2007

மீண்டும் மழலையாகிறேன்!




மீண்டும்
மழலையாகிறேன்!
அப்பொழுதேனும்
அள்ளியெடுத்துக்
கொஞ்ச
நீ
வருவாய் என்று!

மீண்டும்
மழையில் நனைகிறேன்!
காய்ச்சல் இருக்கிறதா
என்று நாளை
நீ
நெற்றி தொட்டுப்
பார்ப்பாய் அல்லவா?

மீண்டும்
தரையைப் பார்க்கிறேன்!
எனக்குள் ஏதோ
சலனமென்று
நீ
என் முகவாய் தொட்டு
தூக்கிப் பார்ப்பாய்!

மீண்டும்
உன்னைப் பிரிந்து செல்கிறேன்!
என் தவிப்பை உணர்ந்து
நீ
என்னைத் தேடி வருவாய்!

Tuesday, February 13, 2007

பரிசு!


காதலர் தினப்பரிசாய்
இக் கவிதையைத்
தருகிறேன் என்றேன்!
ஏற்றுக் கொண்டாய்
என் தோழியாய்!

தோள் கொடுத்தால்
சாய்ந்து கொள்கிறாய்!
கை கொடுத்தால்
பிடித்துக் கொள்கிறாய்!

எல்லா நேரங்களிலும்
சமர்த்தாகவே இருக்கிறாய்!

அடம் பிடிப்பது
எப்போதுமே
நானாக இருக்கவேண்டுமென
விரும்புகிறாய்!
அப்போதெல்லாம்
அன்பாக
சமாதானப் படுத்துகிறாய்!

நீ திட்டினாலும்
செல்லமாய்க்
குட்டுவதாகவே
எனக்குத் தோன்றுகிறது!

காதலா? நட்பா?
என்ற கலந்தாய்வு
நடந்து கொண்டிருக்கிறது
என்னுள் - முடிவின்றி !
அதையும் நீ
அமைதியாக
ரசித்துக் கொள்கிறாய்!

உன் முந்தானைச்
சிறகோடு முகம் வைத்துத்
தூங்க விரும்புகிறேன்!
அதற்கும் அனுமதிக்கிறாய்!

என் விருப்பம்
மட்டுமே
உன் விருப்பம்
என்று
நான் சொல்லும்
அனைத்திற்கும்
செவி சாய்க்கிறாய்!

அன்பென்ற ஒன்றின்
ஆத்மார்த்தமான தேடலில்
முப்பதாண்டு முடிவில்
நீயெனக்கு கிடைத்திருக்கிறாய்!

இன்றுதான் காதலர் தினமாமே!
என்ன பரிசு தருவது உனக்கு?
என்னைத் தவிர?


கட்டாய மாற்றம்


காதலில் விழாதிருந்த
என்னை
கட்டாயமாய் மாற்றிவிட்டாய்!
உன் ஒற்றைப்
பார்வையில்!
பீட்டா
பிளாக்கரைப் போல்!
ஆயினும் கண்டிக்கத்
தோன்றவில்லை!
காதலும்
சுகமாய்த்தானடி
இருக்கிறது!
உன்
பார்வையைப் போல்!